![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38277571-bpl.webp)
டாக்கா,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் லீக் தொடரான ஐ.பி.எல். போன்று வங்காளதேசத்தில் 'வங்காளதேச பிரீமியர் லீக்' நடத்தப்படுகிறது. இதன் 11-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் - சிட்டகாங் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா நபே மற்றும் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கவாஜா நபே 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கிரஹாம் கிளார்க்கும் (44 ரன்கள்) அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகம் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்டகாங் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 78 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர். கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் தவ்ஹித் ஹாரிடாய் (32 ரன்கள்), கைல் மேயர்ஸ் (46 ரன்கள்) இருவரும் கணிசமான பங்களிப்பை வழங்க பார்ச்சூன் பாரிஷால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.