வங்கதேசம் 233 ரன்னில் சுருண்டது வெற்றி முனைப்புடன் இந்தியா அதிரடி: 9 விக்கெட்டுக்கு 285 ரன் குவித்து டிக்ளேர்; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட்

1 month ago 9

கான்பூர்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், வெற்றி முனைப்புடன் அதிரடியாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்து டிக்ளேர் செய்ததால் கடைசி நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்த நிலையில் மழை காரணமாக அன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. மழை தொடர்ந்து பெய்ததாலும், மைதானம் ஈரமாக இருந்ததாலும் அடுத்த 2 நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் 11, லிட்டன் தாஸ் 13, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன் எடுக்க… மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடி சதம் அடித்த மோமினுல் ஹக் 107 ரன்னுடன் (194 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 3, சிராஜ், அஷ்வின், ஆகாஷ் தீப் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, வெற்றி முனைப்புடன் அதிரடியில் இறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜெய்ஸ்வால் – கேப்டன் ரோகித் ஜோடி 3 ஓவரில் 50 ரன் சேர்த்து டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. ரோகித் 23 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, ஜெய்ஸ்வால் – கில் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். இந்தியா 10.1 ஓவரில் 100 ரன்னை எட்டியதும் சாதனையாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 72 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), கில் 39 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர். எனினும், அதிரடியை தொடர்ந்த கோஹ்லி – கே.எல்.ராகுல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது.

கோஹ்லி 47 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 8, அஷ்வின் 1, கே.எல்.ராகுல் 68 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஆகாஷ் தீப் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (ரன் ரேட் 8.22). டெஸ்ட் வரலாற்றில் விரைவாக 150, 200, 250 ரன் எடுத்த சாதனையும் நேற்று இந்தியா வசமானது குறிப்பிடத்தக்கது. பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிராஜ் களமிறங்கவில்லை. வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட், ஹசன் முகமது 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 52 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது. ஜாகிர் ஹசன் 10, ஹசன் முகமது 4 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தனர். ஷத்மன் 7, மோமினுல் (0) களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

ஜடேஜா 300
* டெஸ்டில் 300 விக்கெட் மற்றும் 3000 ரன் எடுத்த 11வது ஆல் ரவுண்டர் என்ற பெருமையும் ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில் கபில்தேவ், ஆர்.அஷ்வினுக்கு அடுத்து 3வது இடம்.
* இந்திய ஸ்பின்னர் ஜடேஜா, நேற்று காலித் அகமது விக்கெட்டை வீழ்த்தியபோது (சி மற்றும் பி) டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். டேனியல் வெட்டோரி (நியூசி. 362), ரங்கனா ஹெராத் (இலங்கை, 433) ஆகியோரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தும் 3வது இடது கை ஸ்பின்னர் ஜடேஜா.
* டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்திய 7வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
* 74 டெஸ்டில் 300 விக்கெட் மற்றும் 3000 ரன் சாதனையை நிகழ்த்தியுள்ள ஜடேஜா, இங்கிலாந்தின் இயான் போதமுக்கு (72 டெஸ்ட்) அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளார்.

The post வங்கதேசம் 233 ரன்னில் சுருண்டது வெற்றி முனைப்புடன் இந்தியா அதிரடி: 9 விக்கெட்டுக்கு 285 ரன் குவித்து டிக்ளேர்; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article