சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் வங்கம் 27 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் அமீரகம் 2 விக்கெட் வித்தியாசத்திலும் போராடி வென்றன. இந்நிலையில் கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் ஷார்ஜாவில் நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன் அடித்தது. அந்த அணியின் தன்ஜித் ஹசன் 40 ரன்(18 பந்து), ஜாகிர் அலி 41 ரன் (34 பந்து), ஹசன் முகமது ஆட்டமிழக்காமல் 26 ரன் (15 பந்து) எடுத்தனர். அமீரகம் தரப்பில் ஐதர் அலி 3, மதிவுல்லா கான், சாகிர் கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய அமீரகம் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அலிசன் சாரப் 68 ரன் (47 பந்து), ஆசிப் கான் 41 ரன் (26 பந்து) ரன் எடுத்தனர். வங்கத்தின் ஷோரிபுல் இஸ்லாம், தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகம் கைப்பற்றியது. வங்கத்துக்கு எதிராக 2வது டி20 தொடரில் விளையாடும் அமீரகம் முதல் முறையாக தொடரை கைப்பற்றி உள்ளது. இதுவரை இந்த 2 அணிகளும் 6 டி20 ஆட்டங்களில் மோதி இருக்கின்றன. அவற்றில் இந்த தொடரில் தான் வங்கத்துக்கு எதிராக முதல்முறையாக அமீரகம் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்றது அமீரகம் appeared first on Dinakaran.