வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பா..?

6 months ago 22

சென்னை,

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை, ரெயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில், தற்போது அங்கு நிலைமை ஓரளவு சீராகி உள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடயே பெஞ்சல் புயலின் பாதையிலேயே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

Read Entire Article