வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல்..? தமிழக கடலோர மாவட்டங்களில் உஷார்

1 week ago 4

சென்னை:

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள இந்த சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாளை மறுநாள் (நவம்பர் 23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 26-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டால் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது. ஆனால், தற்போதைய சுழற்சி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறினால் இலங்கை மற்றும் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வங்கக்கடலில் புயல் உருவானால், அது இந்த சீசனில் உருவான இரண்டாவது புயலாக இருக்கும். இந்த புயலுக்கு பெங்கல் என பெயரிடப்படும். இந்த பெயரை சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது.

பெங்கல் புயல் தமிழக தலைநகர் சென்னைக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது, புயல் சென்னையை கடந்து செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஒரு சில வானிலை பதிவர்கள் கூறி உள்ளனர்.

மழையைப் பொருத்தவரை தமிழகத்தில் இன்று நாகை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சுழற்சியின் வேகத்தை வைத்து அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. புயலாக உருவெடுக்கும்பட்சத்தில் அதன் வேகம் மற்றும் திசையைப் பொருத்து மழையின் தாக்கம் இருக்கும். எனவே, வங்கக் கடலில் நிலவும் வானிலையை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழக கடலோர பகுதி மக்களும், வானிலை தொடர்பான அப்டேட்களை கவனித்து வருகின்றனர்.

Read Entire Article