புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதற்கட்ட அமர்வின் இறுதி நாளான நேற்று வக்பு திருத்தம் மசோதா, 2024ன் கூட்டுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,’எதிர்க்கட்சிகளின் கருத்து வேறுபாடு குறிப்புகள் மாற்றியமைக்கப்படாமல் சேர்க்கப்படுவதில் பாஜவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
உரிய நடைமுறைகளின்படி சபாநாயகர் முடிவு செய்யலாம்’ என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததை அடுத்து, அவர் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புக் குறிப்புகள் தணிக்கை செய்யப்பட்டதாக அவை விமர்சித்தன. இதையடுத்து, அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சபையை ஒத்திவைத்தார். பகல் 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,’ வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, அதில் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக் குறிப்புகளை நீக்கி உள்ளது.
அதேநேரத்தில், வெளியில் இருந்து வந்தவர்களின் கருத்துகளைச் சேர்த்துள்ளது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. இத்தகைய அறிக்கையை தாக்கல் செய்ய சபை அனுமதிக்காது’ என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அனைத்து எதிர்ப்புக் குறிப்புகளும் அறிக்கையின் பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னும் நீங்கள் ஏன் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? எதிர்ப்புக் குறிப்புகளின் எந்தப் பகுதியும் நீக்கப்படவில்லை. குழுவின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திய சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அது விதிகளின்படி செய்யப்பட்டது. ஏனெனில் கூட்டுக்குழுவின் தலைவர் விரும்பினால் எந்த பகுதியையும் நீக்க அவருக்கு அதிகாரம் உள்ளது’ என்றார்.
* இன்று வக்பு, நாளை…. சர்ச், குருத்வாரா…. எதிர்க்கட்சி எம்பிக்கள் அச்சம்
கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் எம்பி சையத் நாசர் உசேன் கூறுகையில்,’ இன்று வக்பு, நாளை குருத்வாரா நிலம், பிறகு சர்ச் நிலத்தைப் பிடுங்கி தங்கள் நண்பர்களுக்குக் கொடுக்க நினைக்கிறார்கள். கூட்டுக்குழு அறிக்கை ஒரு தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நதிமுல் ஹக் கூறுகையில்,’ வக்பு நிலத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். மறுபுறம் அந்த மசோதாவை வாபஸ் பெற்றனர்.
நானும் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன், நாங்கள் கொடுத்த குறிப்பு திருத்தப்பட்டது, அது தணிக்கை செய்யப்பட்டது. விதிகளின்படி அனைத்தும் நடந்ததாக அமைச்சர் கூறினார். இந்த பகுதிகள் எந்த விதியின் கீழ் மாற்றப்பட்டன என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். இந்த மசோதாவை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்’ என்றார். ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில்,’ மசூதிகள் மற்றும் தர்காக்கள் நிலத்தை கைப்பற்றுவதற்கான ஆரம்பம் இது. வரலாறு நம்மை மன்னிக்காது. மோடி அரசு அனைத்து சொத்துகளையும் அதானி மற்றும் சில முதலாளிகளுக்கு கொடுக்க விரும்புகிறது’ என்றார்.
* நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மார்ச் 10ல் மீண்டும் கூடுகிறது
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்ததால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பட்ஜெட் தொடர் மார்ச் 10ல் தொடங்குகிறது. இதுபற்றி குறிப்பிட்ட மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,’ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 17 மணி நேரம் 23 நிமிடங்கள் நடந்தது. 173 எம்.பி.க்கள் ஆக்கபூர்வமான விவாதத்தில் பங்கேற்றனர். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 16 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த விவாதங்களில் 170 உறுப்பினர்கள் பங்கேற்றனர்’ என்றார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும்.
* புதிய வருமானவரி மசோதா தாக்கல்
மக்களவை மதியம் 2 மணிக்கு கூடியதும், புதிய வருமான வரி மசோதா 2025ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். இந்த கூட்டுக்குழு புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று ஜேபிசி தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
* ராகுல், பிரியங்கா போராட்டம்
கேரள கடலோர மற்றும் வன எல்லையோர சமூகங்களை பாதுகாக்க கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
The post வக்பு திருத்த மசோதா தாக்கல் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது appeared first on Dinakaran.