வக்பு சட்டத்திருத்த மசோதா: "மத்திய மந்திரி பேசியது உண்மைக்கு புறம்பானது.." - தி.மு.க. எம்.பி. ஆ.ராசா

1 month ago 7

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக்குழு மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதேவேளை, மசோதாவில் 44 திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அந்த கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. பாஜக அரசு முன்வைத்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மசோதா மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் வக்பு மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், "அரசியல் சாசனம் மீதான அப்பட்டமான தாக்குதல்தான் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா. ஒட்டுமொத்த வக்பு சொத்துகளையும் மத்திய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வக்பு சொத்துகள் என அறிவிக்கப்பட்டதை அரசு சொத்து என வரையறுக்கும் சட்டப்பிரிவே அபத்தமானது.

வக்பு வாரிய திருத்த சட்டம் ஒட்டு மொத்த நாட்டின் விருப்பம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இதற்கு நேரெதிராக தமிழ்நாட்டில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அப்படியென்றால், அது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் அல்ல. இந்த வேற்றுமையை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அது தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது

நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு கிராமம் முழுக்க வக்பு சொத்தாக அறிவிக்கப்பட்டதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது உண்மைக்கு புறம்பானது.

வரலாற்று அடிப்படையிலான சொத்துகளின் உரிமைகளுக்கு இந்த சட்டத்திருத்தம் அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்லாமியர் அல்லாத ஒருவரை வக்பு வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதை ஏற்க முடியாது. உண்மைத்தன்மை பற்றி பா.ஜ.க. எப்போதும் கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு மதம் மட்டுமே முக்கியம். நேர்மையாக சொத்துகளை நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது" என்று ஆ.ராசா கூறினார்

Read Entire Article