லெவல் கிராசிங் பணியின்போது தூக்கம்: 2 ரெயில்வே கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்

9 hours ago 1

சென்னை,

கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று முன்தினம் காலை கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் சங்கர் உள்பட 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமாக கூறப்படும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு தமிழரை தான் கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தினர். அதன்பேரில் திருத்தணி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது33) என்பவர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மாற்று கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த பிஜூ என்பவர் உள்ளார். புதிய கேட் கீப்பர் நேற்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரக்கோணம்-செங்கல்பட்டு ரெயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகள் ஆய்வு நடத்தப்பட்டபோது, பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கேட் கீப்பர்களான கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் பணியின் போது உறங்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது.

முன்னதாக கேட் கீப்பர்கள் பணியின் போது உறங்கினால் பணியில் இருந்து நீக்கும்படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article