லெபனானில் 250 மீட்டர் நீள சுரங்கம் தகர்ப்பு; இஸ்ரேல் அறிவிப்பு

4 months ago 30

டெல் அவிவ்,

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி நாளையுடன் ஓராண்டு ஆகவுள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த சூழலில், இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர்.

லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி படையினர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில், சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு கழகம் இணைந்து நேற்று நடத்திய தாக்குதலில், ஜூட் மற்றும் சமரியா பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வந்த மற்றும் லெபனானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்தவரான முகமது உசைன் அலி அல்-மஹ்மூத் என்பவரை தாக்கி அழித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் நடந்த மற்றொரு தாக்குதலில், லெபனானின் திரிபோலி பகுதியில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவின் மூத்த உறுப்பினரான அலா நயீப் அலி என்ற மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், லெபனானுக்குள் ஹமாஸ் அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பணி மற்றும் இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை நடத்தி வந்திருக்கிறார் என்றும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது.

Read Entire Article