சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்ற திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். இடையே ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சில நாள் ஓய்வுக்குப் பிறகு வரும் 15-ம் தேதி லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூலி திரைப்படத்தின் 2ம் கட்ட பணிகளை துவங்குகிறார்.
இந்நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் திரையுலக கலைஞர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். நிகழ்ச்சியில் விஜய் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விஜய் நடிக்க வேண்டும் என்று தனக்கும் ஆசை இருப்பதாகவும், ஆனால் அவர் எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதில் நாம் தலையிட முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து, லியோ திரைப்படம் பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், ஒருவேளை அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த திரைப்படத்திற்கு "லியோ 2" என்று பெயரிடாமல் "பார்த்திபன்" என்று பெயரிட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். லியோ திரைப்படத்தில் லியோதாஸ் என்ற கதாபாத்திரத்திலும், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்திலும் விஜய் நடித்துள்ளார்.