
லாஸ் ஏஞ்சல்ஸ்,
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் திரும்புவதால் ஒவ்வொரு அணிகளும் தகுதி நிலையை எட்டுவதற்கு ஆர்வமாக உள்ளன. இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது.
இதில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 15 வீரர், வீராங்கனைகள் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுக்கான அட்டவணையை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். ஜூலை 12-ந்தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. பதக்கத்திற்குரிய ஆட்டங்கள் ஜூலை 20 மற்றும் 29-ந்தேதிகளில் நடைபெறும். ஜூலை 14 மற்றும் 21-ந்தேதிகளில் மட்டும் ஆட்டங்கள் கிடையாது.
பெரும்பாலும் ஒவ்வொரு நாளிலும் இரு ஆட்டங்கள் வீதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி மற்றும் இரவு 6.30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதுவே இந்திய நேரப்படி முதலாவது ஆட்டத்தை இரவு 9.30 மணிக்கும், 2-வது ஆட்டத்தை மறுநாள் காலை 7 மணிக்கும் பார்க்கலாம்.
அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் கிரிக்கெட் பிரபலமடைந்து வருகிறது. அங்கு மேஜர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் ஒரு பகுதி ஆட்டங்கள் அமெரிக்காவில் அரங்கேறியது நினைவு கூரத்தக்கது.
கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற போட்டிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. வில்வித்தை ஜூலை 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், பேட்மிண்டன் ஜூலை 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும், துப்பாக்கி சுடுதல் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.