லால்புரம் பெரியார் டெப்போ அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும்

1 week ago 3

*வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியில் இருந்து கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி மற்றும் புவனகிரி வழியாக கடலூர் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இவற்றின் வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகப் பணிக்கு செல்பவர்கள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனை சென்று வருவர் உட்பட பல தரப்பினரும் டூவீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அதேபோல் சென்னை, பாண்டி, கடலூரில் இருந்து புவனகிரி வழியாக சிதம்பரம் வரும் பேருந்துகளும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. மேலும் சிதம்பரத்திலிருந்து கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு வழியாக வடலூர், பண்ருட்டி செல்லும் பேருந்துகளும் இவற்றின் வழியாக அதிக அளவில் சென்று வருகின்றது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் லால்புரம் பெரியார் டெப்போ அருகில் புவனகிரி செல்லும் சாலை ஓரங்களில் அதிக அளவில் லாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நலன் கருதி சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

The post லால்புரம் பெரியார் டெப்போ அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article