புதுடெல்லி,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து நேற்றைய தினம் டெல்லி நோக்கி விஸ்தாரா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 290 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதம் விமானத்திற்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த ஊழியர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். இருப்பினும் அவ்வாறு எதுவும் இல்லாததால் தொடர்ந்து டெல்லியை நோக்கி விமானம் இயக்கப்பட்டது. பின்னர் டெல்லி விமான நிலையத்தில் 290 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதற்கிடையில் விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.