குளச்சல், அக். 19: தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் ஆளுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி இயக்கத்தின் உலக சாதனை நிகழ்வில் பங்குபெற்ற லட்சுமிபுரம் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கிராமப்புற பெண்கள் 20 நாட்களில் 2024 மேலங்கி தைத்து மாணவிகள் மூலம் காட்சி படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெருமளவு மாணவிகளை பங்குபெற ஊக்குவித்த லட்சுமிபுரம் கல்லூரிக்கும், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயந்திக்கும் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கரி பேசும் பொழுது, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி அறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுக்கொள்வதும், படித்து முடித்து தொழில் முனைவோராக உருவாகும்படியான முயற்சியை கல்வி பயிலும் போதே மேற்கொள்ளுவதும் பாராட்டப்படவேண்டிய விஷயம். மாணவ மாணவிகள் தங்கள் நேரத்தை ஆரோக்கியமான வழியில் செலவிடவேண்டும். விருது பெற்ற மாணவிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் உற்சாகமாக பங்குபெற்று வருகின்றனர். பயிற்சி முழுமையாக நிறைவு செய்து கிராமப்புற பெண்களின் உற்பத்தியின் சந்தைப்படுத்துதலுக்கு உறுதுணையாக இருக்க போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செய்திருந்தார்.
The post லட்சுமிபுரம் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு விருது appeared first on Dinakaran.