சென்னை: கடந்த 2014-19ம் ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்பியாக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்துள்ளார். அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணமாக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன் அறக்கட்டளைக்கு 20 கோடி கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன் மீது 2015ம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. லஞ்சமாக பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 20 கோடி கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராமச்சந்திரன் உள்ளிட்ட தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர் பசந்த், வங்கி மேலாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ராஜசேகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கார்த்திக் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் ராமச்சந்திரன், வங்கி அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நம்பும்படியாகவும், ஏற்கும்படியாகவும் இல்லை. இவர்களுக்கு கீழ் கோர்ட் வழங்கிய சிறை தண்டனை, அபராதத்தை ரத்து செய்கிறேன். இவர்கள் சிறையில் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செலுத்திய அபராத தொகையை உடனே திருப்பி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
The post லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.