
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில், வரும் மார்ச் 1-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ஓடுபாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சமயத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் காலை 10 மணி தொடங்கி மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், திட்டமிட்ட விமான சேவைகள் காலை 10 மணிக்கு முன்பும், மாலை 6 மணிக்கு பின்பும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த விமானங்களின் பயண நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக லக்னோ விமான நிலையத்தில் தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 140-ல் இருந்து 132 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தடையற்ற விமான போக்குவரத்தை உறுதிசெய்ய விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.