லக்னம் நின்ற டிகிரியின் முக்கியத்துவம்

2 weeks ago 1

ஜோதிட ரீதியாக உள்ள 12 ராசிகளில், ஒருவர் பிறக்கும் நேரத்தில் எந்த ராசி லக்னமாக அமைகிறதோ அதுதான் அவருக்கு மிக முக்கியமான இடமாகும். அந்த லக்னத்தை வைத்துத்தான் அவரது தோற்றம், மனோதிடம், புகழ், ஆயுட்காலம், தனிப்பட்ட குண நலன், நோய் எதிர்ப்பு சக்தி, சமூக மரியாதை, எண்ணங்களின் தன்மை, இறை அனுக்கிரகம், பிறப்பின் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஜோதிட ரீதியாக சூரியனை மையமாக வைத்து லக்னம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாகக் கொண்டு ராசி மற்றும் நட்சத்திரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஒருவர் பிறந்த நேரத்திலிருந்து அவருடைய திசா-புத்தி கணக்கிடப்படுகிறது.

சூரியன் மேஷம் ராசியில் இருந்தால் அது சித்திரை மாதம் ஆகும். சித்திரை மாதம் பிறந்தவர்களுக்கு மேஷம் ராசியில் சூரியன் இருப்பார். இதேபோன்று மீதமுள்ள 11 ராசிகளும் வரிசையாக வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி என்ற தமிழ் மாதங்களாக கணக்கிடப்படும். அந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற வரிசைப்படி சூரியன் அந்தந்த ராசிகளில் இருப்பார். ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தில் சூரியன் இருக்கும் ராசியிலிருந்து அவர் பிறந்த நேரத்தை கணக்கிட்டு லக்னம் அமையும்.

ஒரு ராசியில் 30 டிகிரி உள்ளது. ஒருவரது லக்னம் அந்த ராசியில் உள்ள எந்த டிகிரியில் தொடங்குகிறதோ அதுதான் அவரது ஜாதகத்தின் மிக முக்கியமான புள்ளியாகும். எல்லா ராசிகளிலும் மூன்று நட்சத்திரங்களும், 9 நட்சத்திர பாதங்களும் இருக்கும். அந்த வகையில் லக்னப்புள்ளி ஒன்பது நட்சத்திர பாதங்களில் ஏதாவது ஒரு நட்சத்திர பாதத்தை குறிப்பிடும் டிகிரியில் நிற்கும். அதுதான் ஜாதகருடைய எதிர்காலத்தை துல்லியமாக குறிப்பிடக்கூடிய புள்ளியாகும்.

லக்னம் விழுந்த புள்ளி மற்றும் அந்த நட்சத்திரம், அதனுடைய அதிபதி கிரகம் ஆகியவற்றின் வழியாக அந்த ஜாதகருக்கு வாழ்வாதாரம் அமைகிறது. லக்னப்புள்ளி விழுந்த நட்சத்திர அதிபதி கிரகம் பெற்ற ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், திக்பலம், நட்பு பலம், சமபலம், நீச்சம் ஆகிய தன்மைக்கு ஏற்ப பலன்களை தருவார்.

லக்னப்புள்ளி அமைந்த நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் பலமாக ஜாதகத்தில் அமைந்திருந்தால் அந்த ஜாதகர் அந்த கிரகம் நின்ற பாவம் மற்றும் காரக பலன்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுவார். அந்த கிரகம் பலமற்ற நிலையில் இருந்தால் குறிப்பிட்ட பாவகம் மற்றும் காரக பலன்களில் பல தடை தாமதங்களை சந்தித்து தடைபட்ட முன்னேற்றத்தையே அடைவார்.

உதாரணமாக, ஒருவருக்கு கடக லக்னத்தில் உள்ள 30 டிகிரியில், 10-வது டிகிரியில் அவருடைய லக்னப்புள்ளி தொடங்குவதாக கணக்கில் கொண்டால், பூசம் 3-ம் பாதத்தில் அது அமையும். அந்த வகையில் பூசம் நட்சத்திர அதிபதி சனியின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்தை கணக்கிட்டு வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தின் லக்னம் மட்டுமல்லாமல் அதையடுத்துள்ள 11 பாவங்களிலும் உள்ள 10-வது டிகிரியை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்ற ராசிகளின் 10-வது டிகிரியில் உள்ள ஒரு கிரகம் அதனுடைய ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவ நிலைகளுக்கு ஏற்ற பலனை, அந்த கிரகம் பெற்ற பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் சரியாக செய்யும்.

அந்த வகையில் கடக லக்னத்தில் 10-வது டிகிரியில் லக்னம் தொடங்குவதாக கொண்டால், (அனைத்து லக்னங்களுக்கும் இதே விதிமுறைதான்) அதற்கு முன்னால் உள்ள 9-வது டிகிரி, அதற்கு அடுத்துள்ள 11-வது டிகிரி ஆகிய மூன்று புள்ளிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மற்ற 11 ராசிகளிலும் அந்த 3 டிகிரிகளிலும் அமர்ந்த கிரகங்களை விசேஷமாக கவனத்தில் கொண்டு பலன்களை நிர்ணயம் செய்யலாம்.

உதாரணமாக கடகத்தில் 10-வது டிகிரியில் உள்ள பூசம் நட்சத்திரத்தில் லக்னப்புள்ளி தொடங்குகிறது என்ற நிலையில் அதனுடைய நட்சத்திர அதிபதி சனி ஆவார். கடக லக்னத்திற்கு சனி 7 மற்றும் 8 என்ற இரண்டு ஆதிபத்தியங்களுக்கு உரியவர் ஆவார். அவர் லக்ன உயிர் புள்ளிக்கு தொடக்கம் கொடுத்தவர் என்ற நிலையில் அவர் நின்ற இடத்தின் மூலமாக, தான் பெற்ற பலம் அல்லது பலவீனத்திற்கு ஏற்ப 7 மற்றும் 8 ஆகிய ஸ்தானங்களுக்குரிய பலன்களை சரியாக செய்வார்.

அதையடுத்து, அதே கடகம் லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு விருச்சிக ராசியில் 10 டிகிரி அல்லது 11 டிகிரியில் குரு இருப்பதாக கொள்வோம். கடக லக்னத்துக்கு குரு 6 மற்றும் 9-ம் ஸ்தானங்களின் அதிபதி ஆவார். விருச்சிக ராசியில் அவர் நின்ற டிகிரி அனுஷம் 3-ம் பாதமாக அமையும். அவ்வகையில் சனி நின்ற வீடு, குருவின் சாரம், நின்ற வீடு, மற்ற கிரக பார்வை, பரிவர்த்தனை, பலம் ஆகியவற்றின் மூலம் குரு அவருக்கு பல நன்மைகளை அளிப்பார்.

மற்ற கிரகங்களும் லக்னப்புள்ளி தொடங்கிய அதே பாகையில் இருக்கும் நிலையில் மேற்கண்ட விதத்தில் பலாபலன்களை நிர்ணயம் செய்தால் அது பல உண்மைகளை வெளிப்படுத்தும்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Read Entire Article