லக்சயா சென் வயது மோசடி விவகாரம்; கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

4 hours ago 1

புதுடெல்லி,

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லக்சயா சென். இவர் இந்தியாவுக்காக பல்வேறு பேட்மிண்டன் தொடர்களில் ஆடி உள்ளார். இந்நிலையில், லக்சயா சென், அவரது சகோதரர் ஷிராக் சென், அவரது தந்தை திரேந்திர கே. சென், தாய் நிர்மலா டி. சென் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் யு. விமல் குமார் ஆகியோர் மீது, சென் சகோதரர்களின் பிறப்புச் சான்றிதழ்களை போலியாக தயாரித்ததாகக் கூறி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாகராஜா எம்.ஜி. தாக்கல் செய்த தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிராக் சென் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து, அவர்களின் வயதை சுமார் இரண்டரை ஆண்டுகள் குறைத்து, பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கவும், அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறவும் உதவியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி லக்சயா சென் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய லக்சயா சென் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக ஐகோர்ட்டு அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இந்த வழக்கை ஏப்ரல் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Read Entire Article