ரோகித் சர்மா இப்போதும் சிறந்த கேப்டன்தான் - சூர்யகுமார் யாதவ் பாராட்டு

2 months ago 9

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில், நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்தாலும் ரோகித் சர்மா இப்போதும் சிறந்த கேப்டன் என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விளையாட்டில் வெற்றி தோல்விகள் நடந்து கொண்டிருக்கும் அனைவரும் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார்கள். சில நேரங்களில் அது வேலை செய்யும் சில நேரங்களில் செய்யாது. ஆனால் அதையும் தாண்டி வாழ்வில் சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதை நான் ரோகித் சர்மாவிடம் இருந்து மட்டுமே கற்றுள்ளேன்.

எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாத அவரைப் போன்றவரை நான் பார்த்ததில்லை. நான் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவரைப் பார்த்து வளர்ந்தேன். ஒரு கேப்டன் தன்னுடைய அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார். கேப்டன் எப்போதும் வெற்றி பெற விரும்புவார்.

ஆனால் தலைவர் தன்னுடைய அணியின் விளையாடும் ஸ்டைலை தீர்மானிப்பார். அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். அவருடன் நான் ஐபிஎல் தொடரில் நிறைய விளையாடியுள்ளேன். அங்கே அவர் எப்படி அழுத்தத்தை கையாள்கிறார், உடல் மொழி, பவுலர்களை எப்படி வழி நடத்துகிறார் என்பது போன்றவற்றை நான் கவனித்துள்ளேன்.

நானும் அதையே செய்ய விரும்புகிறேன். களத்தில் இல்லாதபோது நான் வீரர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுடன் பயணித்து சாப்பிடுவது போன்ற செயல்களை செய்து வருகிறேன். இது போன்ற சிறிய விஷயங்கள் கூட களத்தில் எதிரொலிக்கும்" என்று கூறினார்.

Read Entire Article