சென்னை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% போனஸ் ஊதியம் வழங்கப்படும்.
அதேபோல், உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10% போனஸ் ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இதுதவிர, போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000 தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400 என தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரேஷன் கடை பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் appeared first on Dinakaran.