ஈரோடு, மே 14: ரேபீஸ் எனப்படும் வெறி நாய்க்கடியில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபீஸ் தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும் என மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
ஈரோடு மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், காந்திஜி ரோட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபீஸ் தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும்.
வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் தடுப்பூசி போட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை தேடி வரும் மருத்துவத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை தினசரி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோடை காலங்களில் குடிநீரால் ஏற்படும் நோய்களை தடுக்க சிறப்பான முறையில் செயல்பட வேண்டும்’’ என்றார்.
The post ரேபீஸ் தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும் appeared first on Dinakaran.