நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த கிளாசிக்கல் ஃபார்மேட் உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷ் சீனாவின் டிங் லிரைனைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் கொனேரு ஹம்பி சமீபத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐரீன் சுகந்தரை வீழ்த்தி உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். ஹம்பி 2019ல் ஜார்ஜியாவில் நடந்த போட்டியிலும் வென்று உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியவர்.
சீனாவின் ஜூ வென்ஜுனுக்குப் பிறகு இரண்டு முறை அதிக பட்டத்தை வென்ற இரண்டாவது வீரர் கொனேரு ஹம்பிதான்! அது மட்டுமில்லை விரைவு செஸ் ஆட்டத்தில் ஆனந்த் விஸ்வநாதனுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றிருப்பவரும் இவரே. மேலும் 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் பெண் போட்டியாளரும் இவரே. விரைவு செஸ் போட்டியில் 11 புள்ளிகளுக்கு 8.5 புள்ளிகள் பெற்று போட்டியில் வெற்றி பெற்ற 37 வயதான கொனேரு தன் செஸ் பயணத்தை பகிர்ந்தார்.
‘‘கடந்த ஆண்டு டிசம்பர் மாசம் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. இந்தப் போட்டியில் இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறேன். முதலில் ‘டை-பிரேக்’ ஏற்படும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய விளையாட்டை முடித்ததும், முடிவு என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் வெற்றி பெற்றதாக நடுவர் என்னிடம் சொன்னபோதுதான் எனக்கே தெரிந்தது. பதட்டம் பரவசமாக மாறியது. இந்த வெற்றி நான் எதிர்பாராதது.
2024ம் ஆண்டு முழுதும் நான் பங்கு பெற்ற எந்தப் போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆண்டின் கடைசி போட்டி என்பதால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் போராடினேன். இந்தப் போட்டி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. நான் முதல் இடத்தைப் பிடித்ததாக அறிவித்த போது, ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்தது.
செஸ் ஆட்டத்தில் அனுபவம் இருந்தாலும், முதல் சுற்றில் தோல்வியடைந்த போது, சாம்பியன் பட்டத்தைப் பற்றி சிந்திக்க மனசே வரவில்லை. ஆனால் போகப் போக போட்டியின் போக்கு மாறியது. குறிப்பாக நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றி என்னை முன்னேற உதவியது. போட்டி நடந்த நாட்களில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் தூக்கமும் சரியாக இல்லை. அந்தக் களைப்புடன்தான் போட்டியில் பங்கு பெற்றேன். சரிவர தூங்காமல், ஓய்வு இல்லாமல் விளையாடுவது எளிதல்ல. இத்தனை சிரமங்களுக்கு இடையில் சாம்பியன் பட்டம் பெற்றது ஒரு பூரண திருப்தியை கொடுத்திருக்கிறது’’ என்றவர், தன் பத்து வயதில் இருந்தே செஸ் போட்டிகளில் பங்கு பெற்று பல பட்டங்களை வென்றுள்ளார்.
‘‘சிறு வயதில் இருந்தே என்னுடைய சதுரங்கப் பயணம் ெதாடங்கியது. அதற்கு காரணம் என் அப்பா கொனேரு அசோக். அவர்தான் எனக்குள் இருக்கும் இந்தத் திறமையை கண்டறிந்து அதற்கான பயிற்சியினை அளித்தார். எனக்கு நினைவு தெரிந்து ஆறு வயதில் இருந்தே நான் செஸ் விளையாட துவங்கிவிட்டேன். முதலில் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில்தான் பங்கு பெற்றேன்.
அதனைத் தொடர்ந்து பத்து வயதில், உலகளவிலான யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்றேன். அதனைத் தொடர்ந்து ஆசிய அளவிலான யூத் செஸ் சாம்பியன் ஷிப், உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றேன். 2002ல் இந்தியாவின் இளைய பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றேன். இடையே திருமணம், குழந்தைகள் என்றாலும் நான் விளையாட்டில் இருந்து விலகவில்லை.
குழந்தைபேறுக்காக இரண்டு வருடம் பிரேக் எடுத்துவிட்டு 2019ல் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றேன். அதில் வெற்றியும் அடைந்தேன். 2024ல் அதே ரேபிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றி இருக்கிறேன்’’ என்று கூறும் ஹம்பி, செஸ் உலகத் தரப் பட்டியலில் ஆறாம் இடத்தில் இடம் பெற்றுள்ளார். “செஸ் ஆட்டத்தில் அடுத்தடுத்த வரிசையில் பெண் வீராங்கனைகளான வைஷாலி, திவ்யா, வந்திகா முன்னேறிஉள்ளனர். அவர்கள் ஏற வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது. குறிப்பாக மதிப்பீடுகளில் உயர வேண்டும். அப்போதுதான் உலக செஸ் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மிகவும் வலுவான போட்டியாளர்கள் இடம் பெற முடியும்’’ என்றார் கொனேரு ஹம்பி.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
The post ரேபிட் செஸ் ராணி! appeared first on Dinakaran.