ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றவாளிகளான நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை பிப்.25க்கு ஒத்திவைப்பு

3 hours ago 2

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், நடிகை பவித்ராகவுடா உள்பட 17 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நடிகை பவித்ராகவுடாவுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியதாக கடந்தாண்டு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ராகவுடா, பிரதோஷ், நாகராஜ் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பின், சிறையில் அடைத்தனர்.

இதனிடையில் கொலை வழக்கில் சிறையில் இருந்த தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட குற்றவாளிகள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யகோரி தாக்கல் செய்த மனுனை பெங்களூரு 57வது சிசிஎச் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கு பெங்களூரு 57வது சிசிஎச் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் தர்ஷன், நடிகை பவித்ராகவுடா உள்பட குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதை நீதிபதி பதிவு செய்துக்கொண்டார். அப்போது தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், தனது கட்சிக்காரர் பெங்களூருவில் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனது கட்சிக்காரருக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் சில பிரச்னைகள் இருப்பதால், மாநிலத்தில் பிற மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று சிறப்பு மனு தாக்கல் செய்தார். அதை பெற்று கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ரேணுகாசாமி கொலை நடந்த 6 மாதங்களுக்கு பின் நேற்று நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் பவித்ராகவுடா நேருக்கு நேர் சந்தித்தனர். ஆனால் இருவரும் பேசி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றவாளிகளான நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா நீதிமன்றத்தில் ஆஜர்: விசாரணை பிப்.25க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article