ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்

6 hours ago 1

திருச்சி,

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் கடந்த 8-ந் தேதி காலை ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்கள் என 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்த கேட் கீப்பர் தான் காரணம் என்று விபத்தை நேரில் கண்ட ஒரு சிலர் தெரிவித்தனர்.

ஆனால் கேட்டை மூடுவதற்கு முன்பாக திறந்துவிடும்படி வேன் டிரைவர் கேட்டு கொண்டதாகவும், அதனால் தான் கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என்றும், ஆனால் இது கேட்கீப்பரின் தவறு என்றும் ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே துணை முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில், திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் கீப்பர், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் லோகோ பைலட் (டிரைவர்), உதவி லோகோ பைலட், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய மேலாளர், விபத்துக்கு உள்ளான பள்ளி வேன் டிரைவர் உள்பட 13 பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த விசாரணைக்குழு திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புத்துறைக்கான அலுவலகத்தில் நேற்று முன் தினம் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணைக்கு ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வேன் டிரைவர் தவிர, மீதமுள்ள 11 பேர் நேற்று ஆஜரானதாக கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் 3 பேர் கொண்ட விசாரணை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

ரெயில் வருவது குறித்து முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா?. தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா?. சம்பந்தப்பட்ட ரெயில் கடந்து சென்றபோது, ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா?. அன்றைய தினத்தில் பணியில் இருந்த ஒவ்வொருவரும் முறையாக தங்களது பணியை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவர் அளிக்கும் பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்றும், அதன்பிறகு விசாரணைக்குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்தை நேரில் கண்டவர்களிடமும் விசாரணை நடத்தி அவர்களுடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். .

மேலும், விசாரணை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என்றும், இந்த விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், அதன் அறிக்கை ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், செம்மங்குப்பம் ரெயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதன்படி கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகி உள்ளது. அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துள்ளது.

முன்னதாக ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். விபத்துக்குப் பின், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, 'கேட்டை மூடவில்லை' என்று ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.

இதன்மூலம் கேட் கீப்பரின் அலட்சியமே இந்த ரெயில் விபத்துக்கு காரணம் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

Read Entire Article