ரெயிலில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ்அப்' குழு தொடக்கம்

1 month ago 5

ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு ரெயில்வே போலீசார் சார்பில் "ரெயில் பெண் பயணிகள் பாதுகாப்பு" என்ற 'வாட்ஸ்அப் குழு' அமைக்கப்பட்டு உள்ளது. இதை ரெயில்வே டி.ஜி.பி. வன்னியபெருமாள் தொடங்கி வைத்தார்.

இதில் தினந்தோறும் ரெயிலில் பயணிக்கும் பெண்களான காய்கறி வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள ரெயில்வே பெண் போலீசாரும் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, இவர்கள் குழந்தை பருவம் முதலே ரெயில் பயணம் செய்வதால் ரெயில் பயணத்தில் பெண்களிடம் தொந்தரவு செய்பவர்கள், குற்றம் செய்பவர்கள் குறித்த விவரங்களை அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த குழுவில் சந்தேகப்படும் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவலை தெரிவித்தால், போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும். ரெயில்வே டி.ஜி.பி. அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திலும் இதுபோன்ற குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரெயில் பயணத்தின்போது தாங்கள் பார்க்கும் வழிப்பறி, குற்றச்சம்பவங்களில் செயல்படுபவர்கள் குறித்த தகவல்களையும் இந்த வாட்ஸ்அப் குழுவில் ரகசியமாக பகிர்ந்து கொள்கிறார்கள். சென்னையில் 23 ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே போலீசில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Read Entire Article