ரெயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம்

1 month ago 13

சென்னை,

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 160 ரெயில்களும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 100 ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 ரெயில் நிலையங்களை ஒவ்வொரு நாளும் தலா 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே விடுமுறை மற்றும் விழா நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ரெயில் பயணிகள் வெடிபொருட்கள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கொண்டு செல்லும் நபர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கும் செல்கிறார்கள். ரெயில் பயணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சுமைகளை (லக்கேஜ்) கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், சமீப காலமாக பயணிகள் கூடுதல் சுமை ஏற்றி செல்கிறார்கள். இதுகுறித்து தெற்கு ரெயில்வேக்கு பல்வேறு புகார்கள் வந்தது. எனவே, ரெயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டணம்

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-

ரெயில்களில் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 40 கிலோ வரையிலும் பயணிகள் எடுத்து செல்ல அனுமதி உண்டு. இதேபோல, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான எடையில் உடைமைகளை கொண்டு வரும் பயணிகளுக்கு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, பயணிகள் கொண்டுவரும் உடமைகளை அளவீடு செய்யும் நடைமுறைகள் குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். 

Read Entire Article