தமிழகத்தின் மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக தூத்துக்குடி மாறி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்பிக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஜவுளி மற்றும் ரெடிமேட் துறையிலும் பிரதான இடம் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் பகுதியாக விளங்குகிறது. இங்கு மலிவு விலையில் தயார் செய்யப்படும் சுடிதார், மிடி, கவுன், நைட்டி, சிறுவர் சிறுமிகளுக்கான பேன்ட், சர்ட் போன்ற ரெடிமேட் ஆடைகள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட ரெடிமேட் ஆடை தயாரிப்பாளர்கள் உள்ளனர். இதனை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் ரெடிமேட் ஆடை நல்ல தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைப்பதால் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் புதியம்புத்தூரை குட்டி திருப்பூர் என அழைத்து வருகின்றனர். ஆனால் இங்கு வெளியூர் வியாபாரிகள் பயன்பெற இதுவரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. தற்போது தொழிலில் கடும் போட்டி நிலவுவதால் தங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகளை அரசு செய்து தரவேண்டுமென்று ரெடிமேட் ஆடை தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரெடிமேட் தயாரிப்பில் புதியம்புத்தூர் சிறந்து விளங்கி வந்தாலும், இப்பகுதி பின்தங்கியே காணப்படுகிறது. இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பிற நகரங்களுக்கு நேரடியாக செல்ல போதுமான பஸ் வசதிகள் கிடையாது. மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கும் போதுமான பஸ் வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேர பஸ் சேவை இல்லாததால் ெதாழிலாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு புதியம்புத்தூரில் இருந்து நேரடியாக பஸ் வசதி செய்துதரவேண்டும்.
தற்போது தொழிலாளர்களின் தட்டுப்பட்டால் ரெடிமேட் ஆடை தயாரிப்பு பணி குறைந்து வருகிறது. மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலிருந்தும், ரெடிமேட் ஆடைகள் கொண்டு வருவது அதிகரித்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைக்கவும், ரெடிமேட் சந்தை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கோரிக்கைகள் வைத்தார். இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிலின் மேம்பாட்டிற்காக இம்மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும் என இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெடிமேட் தொழிலில் இந்திய அளவில் முக்கிய இடம் பிடித்துள்ள புதியம்புத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்த செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா அமைக்கப்படுகிறது. பாலியஸ்டர், பாலிமைடு (நைலான்), அக்ரிலிக் மற்றும் பாலியோல்பின் ஆகிய நான்கு செயற்கை இழைகள் தற்போது ஜவுளி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை கொண்டு இங்கேேய ஏற்றுமதி தரத்தில் ரெடிமேட் ஆடைகள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு இந்த ஜவுளித்தொழிற்பூங்கா அமைக்கப்படுகிறது.
புதிய ஜவுளிப் பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடுதல் பஸ் வசதி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். மேலும் புதிய தொழில் முதலீட்டாளர்களும் இப்பகுதிக்கு தொழில் துவங்க தேடி வரும் நிலை உருவாகும். தூத்துக்குடி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் ஓட்டப்பிடாரம் வட்டம் இதன்மூலம் புதிய பொலிவை பெறும் என்பதால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமடைந்துள்ளனர்.
பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது மாவட்ட நிர்வாகம் இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் நிலை உருவாகும் எனவும் மாவட்ட வருவாயும் கணிசமாக அதிகரித்து, ஜவுளி ஏற்றுமதியும் உயரும் என தெரியவருகிறது.
புலிப் பாய்ச்சல் துவங்கியது
கடந்த பிப்ரவரி மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலில் பேசுகையில், ‘நான் மட்டுமல்ல, நம்முடைய அமைச்சர்களும் அதிகாரிகளும் தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் வேண்டுகோள் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி ‘புலிப் பாய்ச்சலாக’ இருக்கும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பகுதிகளின் முகமே மாறும் அளவுக்கு முன்னேற்றமானது பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அது நிச்சயம் நனவாகும்’ என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு நிஜமாகும் வகையில் பட்ஜெட்டிலும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில்தயாரிக்கப்படும் ரெடிமேட் ஆடை நல்ல தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைப்பதால் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் புதியம்புத்தூரை குட்டி திருப்பூர் என அழைத்து வருகின்றனர்.
The post ரெடிமேட் ஆடை தொழிலில் இந்திய அளவில் முக்கிய இடம் பிடித்த தூத்துக்குடி புதியம்புத்தூரில் செயற்கை இழை தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா appeared first on Dinakaran.