ரூர்கீ,
உத்தரகாண்டின் ரூர்கீ நகரில் ரூர்கீ ஐ.ஐ.டி.யில் தாம்சோ 2024 என்ற பெயரில் வருடாந்திர கலாசார திருவிழா நடந்தது. திருவிழாவின்போது, இந்த மையத்தில் மாணவி ஒருவர் பாலிவுட் பட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பொறியியல் படிப்புக்கான மைய வளாகத்தில் நடந்த, தராஸ் என தொடங்கும் இந்த பாடலுக்கான நடனம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், இதனை புகழ்ந்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஒரு சிலர் மாணவியின் திறமையை பாராட்டியும், வேறு சிலர் கல்வி பயிலும் காலத்தில், பாடங்களை விடுத்து வேறு விசயங்களில் ஆர்வம் செலுத்துவதில் சுதந்திரம் அளிப்பது பற்றி கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோவை ஷாலினி கவுர் என்பவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர். எனினும், இந்த மையத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் வீடியோ வெளியாகவில்லை. இந்த நடன நிகழ்வை, அழகாக உள்ளது என பலர் பாராட்டியபோதும், ஒரு சிலர் வேறு விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
இதில் நடனம் எங்கே உள்ளது? என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆபாசமே அதிகம் நிறைந்திருக்கிறது என்று ஒருவர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். தனியுரிமை மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றியும் சிலர் கவலை வெளியிட்டு உள்ளனர்.