ரூட் இல்லை.. சச்சினை விட அந்த இங்கிலாந்து வீரர் சிறப்பாக விளையாடுகிறார் - ஆஸி.முன்னாள் வீரர்

3 weeks ago 6

சிட்னி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான ஹாரி புரூக், 3 வகையான போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் திறன் பல ஜாம்பவான் வீரர்களை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக தற்போதே பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இளம் வயது சச்சினை விட ஹாரி புரூக் தனது கெரியரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஹாரி புரூக்கின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறையை நான் கிரேட் சச்சினுடன் ஒப்பிடுகிறேன். அவருடைய இந்த ஆரம்பகால கெரியர் புள்ளிவிவரங்கள் இதே காலகட்டத்தில் இந்திய மாஸ்டர் சச்சின் வெளிப்படுத்திய செயல்பாடுகளை விட சிறப்பாக இருப்பதாக தெரிகிறது. 25 வயதில் புரூக் உலகிலேயே மிகவும் அதிகம் பேசப்படும் வீரராக வேகமாக வந்துள்ளார். அவர் ஒரு எளிய அதே சமயம் அதிரடியான பேட்டிங் முறையை பெருமைப்படுத்துகிறார்.

ஆரம்பக் காலங்களில் சச்சின் விளையாடியதைப் போலவே அவரும் பேட்டிங் செய்கிறார். அவருடைய டெக்னிக் பந்தை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் விளையாட உதவுகிறது. அதன் பயனாக பெரும்பாலான பந்துகளில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆரம்ப கால நாட்களில் சச்சின் பவுலர்களின் வேகத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு இருபுறங்களிலும் பெரிய ரன்கள் குவித்தார். உடலளவில் புரூக் வலுவான வீரராக இருந்தாலும் சச்சின் போலவே பல்வேறு ஷாட்டுகளை அடிப்பதன் வாயிலாக களத்தில் வியக்கத்தக்க ஒரு திறனை காட்டுகிறார்.

முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் அவர்களுடைய புள்ளி விவரங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் 2 சதங்களுடன் 837 ரன்களை 40க்கும் குறைவான சராசரியில் அடித்திருக்கிறார். ஆனால் புரூக் 1378 ரன்களை கிட்டத்தட்ட 60 என்ற சராசரியில் 5 சதங்களுடன் குவித்துள்ளது வித்தியாசமானதாக இருக்கிறது. சச்சின் போலவே அவருடைய ஆக்ரோஷம் மற்றும் தொடர்ச்சியான ரன்கள் குவிக்கும் திறன் எதிரணி பவுலர்களுக்கு பயத்தை உருவாக்குகிறது. எனவே இங்கிலாந்து அணிக்கு அவர் ஒரு பிரகாசமான வாய்ப்பு மட்டுமல்ல. அவர்களின் எதிர்காலத்தை கட்டி எழுப்பக் கூடிய ஒரு வீரராக இருப்பார்" என்று கூறினார்.

Read Entire Article