ரூ.900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம்; திருச்சியில் ஒரு கிளாம்பாக்கம்: வணிக வளாகத்துடன் அமைகிறது

3 months ago 19

மாநிலத்தின் மையப்பகுதியாக திருச்சி இருப்பதால் இங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கும் பேருந்து வசதி இருக்கிறது. இதைபோல் சென்னை செல்வதற்கு 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது. மேலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். குறிப்பாக விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில் வாகனங்கள் பல கி.மீக்கு அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது இடம் மாற்ற வேண்டும் என்று கடந்த 1990லிருந்தே திருச்சி மக்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த 1994ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்வு பெற்றது. இதையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்தையொட்டி கரூர் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து 2001ல் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான், சென்னை நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டார். ஆனால், அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. இதனால் அந்த முயற்சியையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழுவை திருச்சி மாநகராட்சி அமைத்தது.

இந்த குழு, திண்டுக்கல் சாலையில் உள்ள பிராட்டியூர், மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர், மன்னார்புரத்திலுள்ள ராணுவ பயிற்சி மையம், புதுக்கோட்டை சாலையில் உள்ள கொட்டப்பட்டு, தஞ்சாவூர் சாலையில் உள்ள அரியமங்கலம் உரக்கிடங்கு உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து அனுப்பியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தார். ஆனால் அதன்பிறகு வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், நடைபெற்ற முதல் நிதிநிலை அறிக்கையிலேயே திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 2021 ஆகஸ்ட் மாதம், 2021-22க்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அன்றைய நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திருச்சிக்கு புதிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் மண்வள பரிசோதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் புதிதாக அமையும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.இந்நிலையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை 349.98 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் கடந்த 2021 டிச.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2022 ஜூன் 13ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த திட்டப்பணிகளை செய்வதற்கு ரூ.140 கோடியும், திருச்சி மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ.50 கோடியும், பெறப்பட்டது. இந்த பேருந்து முனைய பணிகள் தற்போது 93 சதவீதம் முடிந்துள்ளது. முழு பணிகளும் 2024 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2 லட்சம் மக்களை கையாளும் அளவிற்கு மிக தரமானதாகவும், பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பேருந்து நிலையத்தின் பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

வருகிற டிசம்பர் மாதத்தில் முழுமையாக பணி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியானது, ஜிஎஸ்டி, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் மறுமதிப்பீடு செய்து கூடுதலாக ரூ.99 கோடி நிதி கேட்டு அரசுக்கு மாநகராட்சி சார்பில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பேருந்து நிலையத்திலும் பயணிகள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் வணிக பிரிவுகளில் குளிரூட்டப்பட்ட அறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால், அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சிஎம்டிஏ சார்பில், இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிச.30ம் தேதி திறந்து வைத்தார். அதைவிட மிகப்பெரியதாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது.

 

The post ரூ.900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம்; திருச்சியில் ஒரு கிளாம்பாக்கம்: வணிக வளாகத்துடன் அமைகிறது appeared first on Dinakaran.

Read Entire Article