திருத்தணி: திருவாலங்காடு – அரக்கோணம் 2வது சாலையில் போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்தும் வகையில் ரூ.82 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருவாலங்காடு- அரக்கோணம் 2 வழிச்சாலை மாவட்ட இதர சாலை பகுதியில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட தனியார் கம்பெனிகள், ஏராளமான கிராமங்கள் உள்ளன. திருவள்ளூர்-அரக்கோணத்தை இணைக்கும் இச்சாலையில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், கரும்பு லாரிகள், டிராக்டர்கள், தொழிலாளர்கள் செல்லும் பேருந்துகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் கிராம மக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். 2 வழிச்சாலையாக உள்ள இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே இச்சாலையை விரிவுபடுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82 கோடி மதிப்பீட்டில் திருவாலங்காடு முதல் அரக்கோணம் நகராட்சி எல்லை சில்வர்பேட்டை வரை 9.2 கிமீ தூரம் 4 வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையை இருபுறமும் விரிவுப்படுத்தி சமன் செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் மாநில நெடுஞ்சாலையில் 21 இடங்களில் சிறுபாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. திருவாலங்காடு முதல் அரக்கோணம் நகராட்சி எல்லை சில்வர் பேட்டை வரை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்று வரும் இந்த சாலைப் பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மு.சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என்றும், கிராம மக்கள் பயன் பெற ஏதுவாக அமைக்கப்பட்டு வரும் இந்த சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) செல்வநம்பி, திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி கோட்ட பொறியாளர் (தர கட்டுப்பாடு) மதியழகன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ரூ.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருவாலங்காடு-அரக்கோணம் 4 வழிச்சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.