ரூ.600 கோடி மோசடி வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற மாஜி எம்எல்ஏவின் ஜாமீன் ரத்து: உடனடியாக சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

5 hours ago 2

சமல்கா: ரூ.600 கோடி மோசடி வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற மாஜி எம்எல்ஏவின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. அரியானா மாநிலம், சமல்கா தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தரம் சிங் சோக்கர், குருகிராமில் போலி வீட்டுக் குடியிருப்புத் திட்டம் மூலம் சுமார் 3,700 பேரிடம் ரூ.600 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மே 5ம் தேதி டெல்லியில் உள்ள ஷாங்கிரி-லா ஓட்டலின் பாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற மருத்துவக் காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 5ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவர் சுதந்திரமாக வெளியில் நடமாடியது தெரியவந்தது. மேலும், பலமுறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததும், காவலில் இருந்தபோது பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகளிலேயே கழித்ததும் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பியது. இந்த நிலையில், அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தரம் சிங் சோக்கரை உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டது. தரம்சிங் சோக்கரின் உடல்நிலை தொடர்பான மருத்துவ ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சிப்பதாகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. அப்போது தரம் சிங் சோக்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தவறான தகவல்களை முன்வைத்ததற்காக நீதிமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ரூ.600 கோடி மோசடி வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற மாஜி எம்எல்ஏவின் ஜாமீன் ரத்து: உடனடியாக சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article