ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1,118 காவலர் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

3 hours ago 3

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டிடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்ஒரு பகுதியாக சென்னை மாவட்டம் – ஆயிரம் விளக்கு பகுதியில் மேன்ஷன் சைட் என்ற இடத்தில் ரூ.380 கோடியே 98 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள 896 காவலர் / தலைமைக் காவலர் குடியிருப்புகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சியில் ரூ.76 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள 222 காவலர் குடியிருப்புகள், என மொத்தம் ரூ. 457 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதேபோல் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் இடநெருக்கடி காரணமாக கோயம்புத்தூர் புறநகர் பகுதியான பிளிச்சி பகுதிக்கு மாற்றியமைக்கும் வகையில் முதற்கட்டமாக 211 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆண்கள் சிறை, 111 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதல்வர்அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் சைலேஷ் குமார் யாதவ், சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1,118 காவலர் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Read Entire Article