செய்யூர்: சூனாம்பேடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார் சாலையை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து மாம்பாக்கம் வழியாக புத்திரன்கோட்டை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரைப்பாலங்களுடன் இந்த சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.3.74 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணி மந்தகதியிலேயே நடைபெற்று வந்தது. மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு விடம் புகார் கூறினர்.
இதுகுறித்து, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து சாலையை ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த அமைச்சர் எ.வ.வேலு, புகாரின் அடிப்படையில் அந்த சாலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பெயரில் நேற்று காலை தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இயந்திரங்களைக் கொண்டு சாலையை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில பகுதிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட குறைந்த அளவில் சாலை அமைக்கப்பட்டது தெரியவந்ததால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சாலையில் பயன்படுத்தப்பட்ட தார், ஜல்லிக் கற்கள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.
The post ரூ.3.74 கோடி மதிப்பீட்டில் தார் சாலை பணி தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார்: எம்எல்ஏ பாபு ஆய்வு appeared first on Dinakaran.