திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் முதல் காசிமேடு வரை உள்ள கடலோர மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் இருந்து விசைப்படகு, பைபர் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்த மீனவர்களின் சுமார் 1500க்கும் மேற்பட்ட படகுகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சிறிய இடத்தில் அதிகப்படியான விசைப்படகுகள் நிறுத்தப்படுவதால் கடும் நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி விற்பனைக்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் மீன், இறால், நண்டு போன்றவற்றை வாங்க வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள் போதிய அடிப்படை வசதியின்றியும், நெரிசலிலும் சிக்கி சிரமப்படுகின்றனர்.
எனவே, விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாகவும், நெரிசல் இல்லாமல் நிறுத்தும் வகையில், மீன் வியாபாரம், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் புதிய துறைமுகம் ஏற்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், திருவொற்றியூர் குப்பம் அருகே, ரூ.200 கோடி செலவில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசு கூட்டு முயற்சியில் நபார்டு வங்கி மற்றும் மாநில அரசு நிதியுடன் இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் நிதியாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.275 கோடியில் திட்ட பணிகள் நடைபெற்றது.
இந்த சூரை துறைமுகத்தில், 400 விசைப்படகுகள், 250 பைபர் படகுகள் நெரிசல் இல்லாமல் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, மீன் ஏலம் விடும் கூடம், படகுகள் பழுது பார்க்கும் மையம், மீன்பிடி வலைகளை பழுது பார்க்கும் கூடம், செல்போன் மற்றும் வயர்லெஸ் தொலை தொடர்பு அறை, ஓய்வு அறை, வாகன நிறுத்தும் இடம், உணவகம், கழிவறை போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த துறைமுகத்தில் 60 ஆயிரம் டன் மீன்களை கையாளும் வசதி ஏற்பட்டுள்ளது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதியில் இந்த சூரை மீன்பிடி துறைமுகம், பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மீன் விற்பனை, ஏற்றுமதி பெருகுவதோடு, சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு வகையில் வேலை வாய்ப்பு ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இங்கு தினமும் மீன்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள், பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இங்கு சுகாதார மையம், உயர் கோபுர மின்விளக்கு, துணை காவல் நிலையம், பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையம் போன்ற வசதிகளையும் எதிர்காலத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.
The post ரூ.275 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் டிசம்பர் இறுதியில் பயன்பாட்டிற்கு திறப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.