ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திடம் சுமார் 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்கிய புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட லஞ்சம் வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்கை பதிவு செய்தது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்திலிங்கத்தின் அறை, தியாகராயர் நகர், கோடம்பாக்கம், மற்றும் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.