சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.01.2025) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் விழுப்புரம் மாவட்டம் -வி.மருதூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் – பட்டணம்காத்தான் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், விடுதிக்கட்டடங்கள் மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம், என மொத்தம் 27 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்தார்.
தொழிலாளர் நலத்துறையானது தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாக, பரந்த மற்றும் பன்முகத் தன்மையுடைய அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா உழைக்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்தல், நியாயமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்தை உறுதி செய்வதன் வாயிலாக உற்பத்தியை பெருக்குதல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திவருகிறது.
மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நல உதவிகளை 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் வாயிலாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.
ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்கள்
விழுப்புரம் மாவட்டம், வி.மருதூர் கிராமத்தில் தரை மற்றும் முதல் தளத்துடன், 3 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் கிராமத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 4 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இவ்வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் அமையப்பெற்றுள்ளன. இதன் மூலம், பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை அளிக்கவும், 20 உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்யவும், பணப் பயன்களைப் பெறவும் இயலும்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் ழிலாளட்ழிநடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற் பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலையில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 1 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்கள் தங்கும் விடுதிக்கட்டடம்;
சென்னை மாவட்டம் – வண்ணாரப்பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிற் பிரிவுகளுக்கான கட்டடம்;
தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாட்டில் 4 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிக் கட்டடம்;
சேலத்தில் 1 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டையில் 8 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம்;
என மொத்தம் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
The post ரூ. 27.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.