சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பல கட்டமாக இது நாள் வரை ரூ.170.60 கோடியில் 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் அடுத்தக்கட்டமான 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை, பல்லவன் சாலையில் இன்று நடைபெற்றது.