ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை – விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 week ago 3

சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.171 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு பள்ளிகளில் இணைய வசதி, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 29 மாவட்டங்களில், 141 அரசு பள்ளிகளில் ரூ.169 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 17 ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் கழிப்பறை;

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் பாச்சேரியில் ரூ.94 லட்சத்து 71 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடம், பெரம்பலுர் மாவட்டம் ஆலந்தூர் ஒன்றியம் மலையப்ப நகரில் ரூ.95 லட்சத்து 23 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடம் என மொத்தம் ரூ.171 கோடியே 16 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அதேபோல், பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 49 நபர்களுக்கு, கருணை அடிப்படையில் 43 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 6 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச்செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை – விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article