புதுடெல்லி: இந்திய வங்கி துறைகளின் நெருக்கடிக்கு பாஜ அரசின் தவறான பொருளாதார மேலாண்மையே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் ஐசிஐசிஐ வங்கி ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் காணொலியை தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து ராகுல் காந்தி வௌியிட்டுள்ள பதிவில், “பாஜ அரசு தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது. பாஜ அரசின் குழு சார்பிலான சதி, தவறான நிர்வாக மேலாண்மை இரண்டும் சேர்ந்த இந்திய வங்கி துறையை நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது. இதன் சுமை மனஅழுத்தம், பணி நெருக்கடியில் உள்ள இளம் பணியாளர்கள் மீதே விழுகிறது.
ஐசிஐசிஐ வங்கியின் 782 முன்னாள் பணியாளர்கள் என்னை சந்தித்தனர். அவர்களின் கதையை கேட்கும்போது தொந்தரவான போக்கு வௌிப்பட்டது. பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றங்கள், உரிய நடைமுறை இல்லாமல் பணி நீக்கம் போன்றவை பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளன.
பாஜ அரசின் தவறான பொருளாதார மேலாண்மை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களை தற்கொலைகளுக்கு தூண்டி உள்ளது. இந்திய வங்கி துறையின் நெருக்கடிகளுக்கு பாஜ அரசே காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
The post ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து; இந்திய வங்கிகளின் நெருக்கடிக்கு பாஜவே காரணம்: ராகுல்காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.