சென்னை: ''12,110 கோடி ரூபாய் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற உண்மை அம்பலமானதும் அம்புலி மாமா கதைகளை சொல்லிவருகிறார் அமைச்சர் பெரியகருப்பன்'' என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 – 2022 முதல், 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?