ஐநா: செயற்கை நுண்ணறிவில் ரூ.11950 கோடி தனியார் முதலீட்டுடன் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு (யுன்சிடிஏடி) அமைப்பு தொழில்நுட்பம் மற்றும் புதுமை 2025க்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எல்லைப்புற தொழில்நுட்பங்களுக்கான தயார்நிலை குறியீட்டில் 2024 ம் ஆண்டில் இந்தியா 36 வது இடத்தைப் பிடித்துள்ளது.
எல்லைப்புற தொழில்நுட்பங்களுக்கான ஒரு நாட்டின் தயார்நிலையை அளவிடும் உலகளாவிய குறியீட்டில் 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. 2022 ம் ஆண்டில் 48 வது இடத்தில் இருந்த இந்தியா தனது நிலையை மேம்படுத்தியுள்ளது.
இந்தக் குறியீடு, தகவல் தொழில்நுட்ப பயன்பாடு,திறன்கள்,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடு, தொழில்துறை திறன் மற்றும் நிதி அணுகல் ஆகியவற்றிற்கான குறிகாட்டிகளை ஒருங்கிணைக்கிறது.
இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் 99வது இடத்திலும், திறன்களில் 113வது இடத்திலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 3வது இடத்திலும், தொழில்துறை திறனில் 10வது இடத்திலும், நிதித்துறையில் 70வது இடத்திலும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில்(ஏஐ) சீனா, ஜெர்மனி, இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்களது அறிவியல் வலிமையை காட்டுகின்றன. கடந்த 2023ம் ஆண்டில் உலகளவில் ஏஐ துறையில் 70 சதவீத தனியார் முதலீட்டுடன்(ரூ.5.71 லட்சம் கோடி) அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்தாற்போல் ரூ.66850 கோடியுடன் சீனா 2ம் இடத்தில் உள்ளது. ரூ.11950 கோடியுடன் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
The post ரூ.11,950 கோடி தனியார் முதலீட்டுடன் செயற்கை நுண்ணறிவில் இந்தியா 10வது இடம்: ஐநா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.