ராணிப்பேட்டை: “இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.