ரூ.1,853 கோடி மதிப்பில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு

10 hours ago 2

புதுடெல்லி: ரூ.1,853 கோடி செலவில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரை 2 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டு வரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்து தேவையை கவனத்தில் கொண்டும், பரமக்குடி – ராமநாதபுரம் வரை 46.7 கிமீ தொலைவிற்கு 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த 4 வழிச்சாலை, 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 3 மாநில நெடுஞ்சாலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும். ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவிடும் என அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுதவிர, வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும். அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி.

இதன் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவர்களாக இருப்பார்கள். மேலும், ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழலை மேம்படுத்தும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மூலதன நிதியுடன் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு (ஆர்டிஐ) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பூஜ்ய வட்டி விகிதங்களில் நீ ண்ட கால நிதியுதவி வழங்கப் படும்.

* தேசிய விளையாட்டு கொள்கை அறிமுகம்

நாட்டின் விளையாட்டு சூழலை மறுவடிவமைத்து, விளையாட்டு மூலம் பொதுமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய விளையாட்டுக் கொள்கை 2025க்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

The post ரூ.1,853 கோடி மதிப்பில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article