புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்ஸுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் பேய்களுக்கு என்று கொண்டாடப்படும் ஹாலோவின் திருவிழா வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். இந்த விழாவையொட்டி பேய், ஆவிகள் போல வேடமணிந்து சாலையில் திரண்டு செல்வார்கள்.
இந்தநிலையில் டெல்லியை சேர்ந்த ஷைபாலி கேக்பால் என்ற பெண், ஹாலோவின் திருவிழாவை கொண்டாடும் வகையில் பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்து ரீல்ஸ் எடுத்தார். அதாவது, பேய்க்கான உடை அணிந்து, அதற்கேற்ற ரத்த சிவப்பு வண்ண மை பூசி, கண்களில் 'லென்ஸ்' பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்தும் வகையில் ஈடுபட்டார். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகள், பெண்கள் ஆகியோரைப் பயமுறுத்தும் வகையில் ஈடுபட்டார்.
அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக, அவரின் இந்தப் பேய் வேடத்தைப் பார்த்ததும் நாய் ஒன்று அவரைத் துரத்த தொடங்கிவிட்டது. இதில் உயிருக்கு பயந்துபோய் அவர் கத்துகிறார். நாயும் விடாமல் அவரை விரட்டி விரட்டி குரைத்தது. இது பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு எதிராகப் பலர் கண்டன கருத்து தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் முன்பு இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.