தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4 ந்தேதி புஷ்பா 2 படத்தை அல்லு அர்ஜூனுடன் முதல் நாள் நள்ளிரவு காட்சி பார்ப்பதற்காக கடும் கூட்டம் முண்டியடித்தது.
அல்லு அர்ஜூனை பார்க்கும் ஆவலில், கணவனை வற்புறுத்தி குழந்தைகளுடன் திரையரங்கிற்கு அழைத்துச் சென்றிருந்த ரேவதி என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியானார். குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது
பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 5ந்தேதி திரையரங்கு நிர்வாகம், அல்லு அர்ஜூன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது பிஎன்எஸ் 105, 118 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
நடந்த சம்பவம் தனது இதயத்தை நொறுக்கி விட்டது என்று 6ந் தேதி அறிக்கை வெளியிட்ட அல்லு அர்ஜூன் பலியான ரேவதியின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதுடன், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் சிகிச்சைக்கான முழு செலவையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்தார்
டிசம்பர் 8ந்தேதி இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாப்பு மேலாளர் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது பவுன்சர்களை கைது செய்ய வில்லை.
இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க கோரி அல்லு அர்ஜூன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்ததால் தான் இவ்வளவு பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அவரது பாதுகாவலர்களின் கெடுபிடியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர் பலிக்கு காரணமானதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அல்லு அர்ஜூன் குழுவினர் வரும் தகவல் காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்காததால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தனர். விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
12ந்தேதி தனது கணவர் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அல்லு அர்ஜூனின் மனைவி சாமி தரிசனம் செய்தார்
13 ந்தேதி காலை அல்லு அர்ஜூனை கைது செய்ய அவரது இல்லத்துக்கு போலீசார் சென்றனர். போலீசாருடன் செல்வதற்கு முன்பாக தனது மனைவிக்கு முத்தமிட்டு தைரியமூட்டிய அல்லு அர்ஜூன் பதட்டமில்லாமல் காணப்பட்டார்
அவரை கைது செய்து போலீசார் காரில் ஏற்றிய போது அவருக்கு முன்பாக அவரது தந்தை அல்லு அரவிந்து போலீஸ் வாகனத்திற்குள் ஏறி அமர்ந்து கொண்டார், அவரை போலீசார் வெளியேற்றினர்
“எங்கு சென்றாலும் அப்பாவுடன் தான் செல்வேன்” என்று அல்லு அர்ஜூன் தெரிவித்த நிலையில் “கைது செய்தவர்களை மட்டும் தான் போலீஸ் வாகனத்தில் ஏற்ற இயலும்” என்று கூறி அவரை மட்டும் காரில் ஏற்றினர். காந்தி மருத்துவமனையில் அல்லு அர்ஜுனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை தொடர்ந்து அவரை நம்பள்ளி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்
அல்லு அர்ஜூனை 14 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் நடந்த புஷ்பா 2 படத்தின் வெற்றி விழாவில் அல்லு அர்ஜூன் முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி தெரிவிக்காமல் பேசினார். பிறகு சிலர் சுட்டிக்காட்டியதும் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி தெரிவித்தார். இதனால் அரசியல் காழ்ப்புணர்சியுடன் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அல்லு அர்ஜூன் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
அதே நேரத்தில் திரையரங்கில் நடந்த கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு அல்லு அர்ஜூன் எப்படி பொறுப்பாவார் ? என்று கேள்வி எழுப்பி உள்ள பாரதீய ராஸ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.எல்.ஏ கே.டி.ராமாராவ், தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜூனை பெரிய குற்ற வாளியை போல கைது செய்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் மீது போலீசில் புகார் அளித்த ரேவதியின் கணவர் தனது புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சட்ட வல்லுனர்களின் தொடர் முயற்சியால் அல்லு அர்ஜூனுக்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.