ராசிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே 7 கி.மீ தள்ளி அணைப்பாளையத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து காரியத்தில் இறங்கியுள்ளது. இதையொட்டி ஏகத்துக்கும் அங்கே சர்ச்சைகள் வெடித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்காக ‘ராசிபுரம் மக்கள் நலக்குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என போராடி வரும் அவர்கள், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே சேலத்தைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமை யாளருக்குச் சொந்தமான இடம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த இடத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இச்சூழலில் ஆளுங்கட்சியினர் சிலர் இதில் தலையிட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தை இங்கு மாற்றவைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.