*ஜோலார்பேட்டை அருகே போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் திம்மராயன்(55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 17ம்தேதி காலை பொன்னேரி அருகே உள்ள அரியான் வட்டம் பகுதியில் உள்ள வாழைதோப்பில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திம்மராயனின் சகோதரி மகனான முன்னாள் ராணுவ வீரர் சக்கரவர்த்தி(42) என்பவருக்கும், திம்மராயனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று காலை வாழைத்தோப்பில் இருந்த திம்மராயனை சக்கரவர்த்தி வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தலைமறைவான சக்கரவர்த்தியை பிடிக்க எஸ்பி ஸ்ரேயாகுப்தா உத்தரவின்பேரில், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, எஸ்ஐ பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திம்மராயனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், குற்றவாளியை ஒரு வாரமாகியும் கைது செய்யவில்லை எனக்கூறி நேற்று காலை ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, எஸ்ஐ பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘கொலை செய்துவிட்டு ஏலகிரிமலை காட்டில் தலைமறைவாக உள்ளவரை ஏன் கைது செய்யவில்லை’ எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் எனக்கூறினர். ஆனால் இதை ஏற்க மறுத்த உறவினர்கள், கொலையான திம்மராயன் உருவப்படத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.