
சென்னை,
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 பெண்ணின் தற்கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. அந்த பெண் இறப்பதற்கு முன்பு பேசிய ஆடியோக்கள் கல் நெஞ்சையும் கரைய வைக்க அளவிற்கு வலி நிறைந்ததாக இருக்கிறது. திருமணம் முடிந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் அந்தப் பெண் பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அடைந்ததாக அதில் கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
ரிதன்யாவின் தற்கொலை குறித்து பல பிரபலங்களும் சாதாரண மக்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை காயத்ரி ரகுராம் தனியார் நிகழ்ச்சி சேனலுக்கு ஒன்று பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது:-
ரிதன்யாவுக்கு நடந்தது ஒரு சோகமான விஷயம். திருமண வாழ்க்கை சரியில்லை என்றால், வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது என நினைக்கக்கூடாது. எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது அதுதான்.
எனக்கு திருமண வாழ்க்கை சரிபட்டு வராத காரணத்தால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ரிதன்யாவுக்கு மனசு நொந்துபோகுற அளவுக்கு கொடுமை நடந்திருக்கு. அதனால் இந்த முடிவுக்கு வந்துருப்பாங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து நான் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு காரணம் அதேபோல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது. நான் வெளியே வந்து இன்றும் இந்த உலகத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.