ராமநாதபுரம் பனங்கற்கண்டு, பட்டறை கருவாடு, கோவில்பட்டி சீவலுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம்

1 month ago 6

சென்னை: ராமநாதபுரம் பனங்கற்கண்டு உள்ளிட்ட 3 உணவு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்க கோரி தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் விண்ணப்பித்துள்ளது. ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, உடன்குடிகருப்பட்டிக்கு புவிசார் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தற்போது ராமநாதபுரம் பனங்கற்கண்டு, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு ஆகிய 3 உணவுப் பொருட்களுக்கு புவியியல் குறியீடு கோரி ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்கு தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் விண்ணப்பித்துள்ளது. பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுவதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும். இந்த குறியீடு வழங்கப்பட்டால் அதே பெயரில் வேறு யாரும் பொருட்களை உற்பத்தி செய்து விற்க முடியாது; அவற்றை மீறி போலியாக தயாரித்து விற்பனை செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ராமநாதபுரம் பனங்கற்கண்டு: கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரத்தில் பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனை மரங்கள் சாகுபடியில் முக்கியமானதாக இருக்கிறது. இப்பகுதியில் உள்ள வறண்ட சூழல், வெப்பம் மற்றும் மணல் மண் ஆகியவை வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரும் பண்பு கொண்ட பனை மரம் வளர சிறந்த சூழ்நிலையை வழங்குகிறது. இந்த பனைமரங்கள் அப்பகுதியில் பொதுமக்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ராமநாதபுரம் பட்டறை கருவாடு: இது ராமநாதபுரத்தில் தயாரிக்கப்படும் முக்கியமான பாரம்பரிய உலர் மீனாகும். மீன்களில் மஞ்சள் உள்ளிட்ட மசாலை தடவி அதை மண்ணில் குறிப்பிட்ட காலத்திற்கு புதைத்து வைப்பது மூலம் இந்த பட்டறை கருவாடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் பாரம்பரியமாக உணவாகவே இவை உள்ளது. பொதுவாக வஞ்சரம், ரிப்பன் மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட அதிக சதை கொண்ட மீன்களையே இதுபோல பட்டறை கருவாடாக உற்பத்தி செய்வர்.

கோவில்பட்டி சீவல்: கோவில்பட்டி பகுதியில் செய்யப்படும் ஒரு தனித்துவமான நொறுக்கு திண்பண்டமாகும். அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீவல் சுவைக்கு தனி வாடிக்கையாளர்களே உள்ளனர். அரிசி மாவை, சீரகம் உள்ளிட்ட மசாலா பொருட்களுடன் சேர்ந்து உருவாக்கப்படுவதாகும் இது.

The post ராமநாதபுரம் பனங்கற்கண்டு, பட்டறை கருவாடு, கோவில்பட்டி சீவலுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article